Pages

Friday 26 October 2012

பிணம் தின்னும் சாமி

அன்று வீட்டில் ஒரே பரபரப்பு அப்பா எப்போது வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து வாசலை பார்த்துக்கொண்டும் வீட்டிற்குள் ஓடிக்கொண்டும் இருந்தோம் அம்மா முறுக்கு ,அதிரசம் ,அரி உருண்டை என்று மணக்க மணக்க சுட்டு அடுக்கி கொண்டு இருந்தால் பாட்டி எங்களுக்கு தேவையான துணிகள் மற்றும் இத்தியாதி பொருட்கள் அனைத்தையும் பைக்குள் திணித்து வைத்துகொண்டு இருந்தால் .சற்று நேரத்திற்கெல்லாம் அப்பா நிறைய பைகளை தூக்கி கொண்டு வருவதை பார்த்து அனைவரின் முகத்திலும் நூறு வாட்சு பல்பு எரிந்தது வீடே பிரகாசமாய் காட்சியளித்தது.


பைகளை வாங்க ஓடிய என்னை தடுத்து அம்மா அனைத்தையும் வாங்கி கொண்டால் எனக்கு வருத்தம்தான் ஆனாலும் அடுத்து அம்மா என்ன செய்வாள் என்று அவளையே பார்த்துகொண்டு நின்றேன் புது துணிகள்எனக்கும் அக்காவிற்கும் ஒரே மாதிரி சிவப்பு சட்டையும் சிவப்பு பூ போட்ட வெள்ளை பாவடையும் பார்க்கவே எனக்கு அப்படி ஒரு ஆனந்தம் குதித்துகொன்டே இருக்கிறேன் என் சந்தோசத்தை அடக்க முடியாமல் அம்மாதான் அடக்குகிறாள் ஆடாமல் நில்லுடி என்று .அப்பா சிரித்துகொன்டே சாதனாவிடம் கொடு அவள் போட்டு பார்க்கட்டும் என்கிறார் அப்பாவை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு புது சட்டை பாவாடையை வாங்கி கொண்டு கண்ணாடி முன் நிற்கிறேன் போடாமல் மேலே வைத்து பார்த்தத்தில் உலகிலேயே நான் தான் அழகான பெண் என்று தோணியது எனக்கே என்னை பிடித்தது அந்த புது துணியில் .அதை முத்தமிட்டு முகர்ந்து பார்கிறேன் அந்த வாசம் என்னை வேறு ஒரு புது உலகத்திற்கு எடுத்து சென்றது .


எப்படியோ அனைவரும் கிளம்பி விட்டோம் இரவு பேருந்தில் பயணம் இந்தனை ஆர்ப்பாட்டமும் ஊரில் நடக்கும் சொடலை மாடன் கோவில் திருவிழாவிற்குதான் திருநெல்வேலி மாவட்டம் சொரண்டை அருகில் கழுநீர்குளம் தான் அம்மாவிற்கு சொந்த ஊர் அங்கதான் அந்த கோவில் இருக்கு இப்பொழுதான் முதல் முறை நான் அங்கு போகிறேன் .பேருந்து பயணம் தூக்கமும் அலுப்புமாக கடந்தது காலையில் ஊரில் இறங்குகிறோம் .ரோட்டோரமாய் புளியமரத்திர்க்கு அருகில்தான் பாட்டி வீடு மச்சி கட்டின வீடு என்று சொல்லுவாங்க அதுதான் அந்த ஊருக்கு அடையாளம் பாட்டி பேரு செவ்வந்தியம்மால் ஆனால் அப்படி சொன்னால் யாருக்கும் தெரியாது கங்காணியம்மா அப்படின்னு சொன்னாதான் தெரியும் .எங்க தாத்தா தேயிலை தோட்டத்தில் அந்த காலத்தில் கணக்கு பார்த்துகொண்டு இருந்தாராம் கணக்கு பார்ப்பவர்களை கங்காணி என்றுதான் சொல்லுவார்கள் அவரோட மனைவி என்பதால் என் பாட்டி கங்காணியம்மாவாகிபோனால் .


வீடு உள்ளே நுழைந்ததும் பெரிய வரண்டா அதை தாண்டி உள்ளே போனால் தொட்டி போல் இருக்கும் அதன் மேல் திண்ணை மாதிரி நாலு புறமும் சுவரு படி ஏறி போனால் உள்ளே சாமி அறை படுக்கையறை, சமையல் அறை , தானியங்கள் கொட்ட குதிரு இருக்கும் வீடு அழகாய் இருந்தது. மேலே நெல்லை காயப் போட மச்சி என்று சொல்லுவார்கள் பலகையால் அமைத்து அதற்க்கு படிக்கட்டுகளும் மரத்தால் செய்து இருந்தார்கள் அங்கே போய் படுத்து கொண்டோம் . எனக்கு ரொம்ப பிடித்தது அந்த இடம்தான் சிறிது நேரத்திற்கெல்லாம் பாட்டி கீழே கூப்பிட்டால் பதனி வந்திருக்கு வந்து குடிங்க என்று .


சொம்பு நிறைய தேங்காய் தண்ணி போல ஒரு வெண்மையான நிறத்தில் தண்ணீர் இனிப்பாக இருந்தது குடித்ததும் வாந்தி வந்து விட்டது எனக்கு பிடிக்கவில்லை என்று அம்மாவிடம் கொடுத்தேன் உடம்பு சூடு குறையும் குடித்தா என்று பாட்டி சொல்ல நான் ஓடி போய் மச்சியில் அமர்ந்துகொண்டேன் .
அதன் பின் என்னை கட்டாயப்படுதாமல் சாப்பாடு செய்ததும் சாப்பிட சொன்னார்கள்.அதன் பின் என்னையும் அக்காவையும் வயலுக்கு கூட்டிட்டு போனாங்க வயலை பார்த்ததும் மனசு ரொம்ப சந்தோசமா இருந்தது வரப்பில் நடக்கும் போது வாய்கால் தண்ணீரில் கால்களை நனைத்தபின்தான் தாகம் அடங்கியது அதுவரை அந்த மொட்டை வெளியிலில் வெந்துபோனோம்.பம்பு செட்டு, தென்னை மரம் என்று எல்லாமே எனக்கு புதிதாக இருந்தது இளநீர் பறித்து சீவி குடிக்க சொன்னார்கள் முதல் முறை இளநீர் குடிக்கிறேன் வாயில் வைத்து உறிஞ்சி குடித்ததில் இளநீர் தடிமனான தோள் என் உதட்டில் பட்டு உதட்டின் மேல் வீங்கி விட்டது இப்படியா குடிப்ப என்று மாமா பையன் கிண்டல் பண்ணி சிரிக்கிறான் .அவனை எனக்கு பிடிக்கவில்லை அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து அம்மாவிடம் காட்டினேன் அம்மாதான் சமாதானம் செய்தால் சரியாகிவிடும் என்று .

மாலை அனைவரும் கோவிலுக்கு கிளம்பினோம் அபோதுதான் புது சட்டை பாவடையை அம்மா போட்டுவிட்டாள் .மறுபடியும் அழகியானேன் சிவப்பு கலர் கிளிப்பு மாட்டி இரட்டை சடை போட்டுவிட்டு அதே கலரில் பொட்டு வைத்து ,வளையலும் கூட சிவப்பு "அம்மா என்னை பார்த்து திருஷ்டி கழித்தால் என் கண்ணே பட்டுடும் குட்டிமா என்று ? நான் வேட்கபட்டு முகத்தை சாய்த்து சிரிக்கிறேன் எனக்குள் பட்டாம் பூச்சி பறப்பது போல இருந்தது.


கோவிலுக்குள் செல்லும் வழியெங்கும் அரிவாளோடு குதிரை மீது அமர்ந்து பயமுறுத்தும் கருப்பசாமி .சாமியை முழுதாய் பார்க்காமல் ஓரகண்ணால் பார்த்துகொண்டு பயத்தோடு கோவிலுக்குள் செல்லுகிறேன் கோவிலுக்குள் நிறைய மஞ்சள் சேலை வேப்பிலை சகிதம் சாமியாடிகொண்டு இருந்தார்கள். உரி அடித்துக்கொண்டு மத்தளம் கொட்டிக்கொண்டும் நாதஸ்வரத்தில் பழைய அம்மன் பாடல்கள் பாடிக்கொண்டு இருந்தார்கள் அந்த இசைக்கு ஏற்ப இவர்கள் ஆடுவது போல தெரிந்தது எனக்கு சிறிது நேரத்திற்கெல்லாம் எனக்கும் கூட ஆட தோணியது அம்மா அடிப்பாள் என்று அடக்கத்துடன் சாமியை கும்பிடுகிறேன் .பூசாரி கோடு போட்ட வேலைபாடுகளுடன் அமைந்த சிவப்பும் மஞ்சளும் கலந்த கால் சட்டை அணிந்திருந்தார் அதற்க்கு சரியாக ஒரு தொப்பியையும் அணிந்திருந்தார் மேல் சட்டை போடவில்லை உடல் முழுதும் சந்தனமும் திருநீறும் பூசக்கொண்டு பார்க்கவே சொடலை மாடன் சாமி போலவே இருந்தார் .சாமி கும்பிட்டு விட்டுத் திருவிழாவில் ராட்டினம் ,தூரி என ஆடி மகிழ்ந்துவிட்டு ஒரு கரடி பொம்மையும், வண்ணம் மிக்க வட்டமான ஒட்டு பொட்டும் வாங்கி கொண்டேன்.




நள்ளிரவு வந்தது எல்லோரும் கோவிலுக்கு வெளியே அமைதி காத்திருந்தனர் சாமி போகும் நேரம் சுடுகாட்டுக்கு போகும் ஆகவே யாரும் தூங்கிடாதீங்க என்று சொன்னார்கள் .ஆனாலும் என்னால் தூக்கத்தை கட்டுபடுத்த முடியவில்லை. நின்றுகொண்டே அம்மா மீது சாய்ந்து தூங்கிக்கொண்டு இருந்தேன் திடீரென்று சாமியார் சாட்டையை கையில் சுழட்டிக்கொண்டு அரிவாளை எடுத்துக்கொண்டு வேகமாய் வந்தார் நான் அரை தூக்கத்தில் கனவு என்று தான் நினைத்தேன் சிறிது நேரத்திற்கெல்லாம் என் மீது சாட்டை அடித்தது போல சுள்ளென்று வலி பதறி தூக்கம் தெளிந்தேன் .என் அருகில் நின்று கொண்டிருந்தவர் மேல் அடி விழுந்திருக்கு அதில் கொஞ்சம் எனக்கும் என்று தெரிந்தபின் அழ ஆரமித்தேன் அம்மா சமாதனம் செய்தும் ஆகவில்லை அதற்க்கு முன் நான் தூங்கியதால் தான் சாமி என்னை அடித்துவிட்டதோ என்று நினைத்து அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டேன் உண்மை தெரிந்துபிந்தான் வலி உணர்ந்து அழுதேன் இதை எல்லோரும் சொல்லி சிரிப்பார்கள் ஆனால் நான் மட்டும் கொஞ்சம் பயத்துடன் அந்த சம்பவத்தை நினைப்பேன் இன்னும் சிலிர்கிறது.


மேலும் சுடலை மாடனை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள



சுடலை மாடன் கதை 

சுடலை மாடன் சிவன் பார்வதியினால் படைக்கப்பட்டு அவர்களது மகனாக ஏற்கப்பட்டவர். ஒரு முறை கைலாயத்தில் இருந்த பார்வதிக்கு ஒரு மகன் வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆனால் சிவபெருமானோ தான் பார்வதியுடன் உறவு கொண்டால் அகண்டமே ஆடி விடும் என பயந்தார். அதே நேரத்தில் பார்வதியின் ஆசையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக அவளை பாதாள உலகிற்குப் போய் அங்கு எரிந்து கொண்டு இருந்த ஒரு விளக்கின் பொறியை எடுத்து வருமாறுக் கூறினார். பார்வதியும் பாதாள லோகத்துக்குப் போய் அவர் கூறியபடியே விளக்கின் பொறியை தனது சேலையில் முடித்து வைத்துக் கொண்டு கைலாயத்துக்கு வந்தாள். அங்கு வந்ததும் தனது சேலையில் முடித்து வைத்து இருந்த விளக்கின் பொறியை வெளியில் எடுத்தபோது அது ஒரு உருவமற்ற மொத்தையான ஜடமாக இருந்தது. ஆகவே பார்வதியின் மீது பரிதாபப்பட்ட சிவன் அதற்கு ஒரு உயிரைத் தருமாறு பிரும்மாவிடம் கூற அவரும் சுடலை மாடனுக்கு உயிர் கொடுத்து ஒரு குழந்தை உருவமாக்கினார். முதலில் முடமாகவும் முண்டமாகவும் பிறந்து இருந்ததினால் அதன் பெயர் சுருட்டி வைக்கப்பட்டு இருந்த முண்டன் என ஆயிற்று. அதுவே பின்னர் முண்டன் என ஆகி அதுவும் மருவி மாடன் என ஆயிற்றாம்.


அந்தக் குழந்தையை ஆசையுடன் பார்வதி தேவி தாய்ப் பாலைத் தராமல் அமிர்தத்தை ஊட்டி வளர்த்து வந்தாலும் அந்தக் குழந்தை நாளடைவில் அதிக பசி கொண்டு ஆலயத் துவங்கியது. கைலாசத்தின் மயானத்தில் இருந்த (மயானத்தை சுடலை என்றும் கூறுவார்கள்) எரிந்து கொண்டு இருந்த பிணங்களைத் தின்னத் துவங்கியது. அதன் பிறகும் பசி அடங்காமல் போய் விலங்குகள், மரங்கள், பேய்கள் என அனைத்தையும் தின்னத் துவங்கியது. அந்த குழந்தை பிணம் தின்னும் பேயாகவே மாறி விட்டதினால் அதை இனியும் தேவ லோகத்தில் வசிக்க முடியாது என்று எண்ணிய சிவபெருமான் அதை பூலோகத்திற்குப் போய் அங்கு மக்களை ரட்சித்து வருமாறு பூலோகத்திற்கு அனுப்பினார். அவருக்கு சுடலை மாடன் எனப் பெயரிட்டு பூமியில் அவருக்கு வருடத்தில் எட்டு நாட்கள் விழா எடுத்து, உணவு படைத்து ஆராதிப்பார்கள் என்றும், விழாவின் முடிவாக அவர் பக்தர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டும் எனவும் கூறி அனுப்பினார். 

அவருக்கு சுடலை மாடன் எனப் பெயரிட்டு பூமிக்கு அனுப்பியதும் மனித ரூபம் எடுத்த அவர் பகவதி என்பவளின் வீட்டிற்குச் சென்றார். வந்தவரை யார் என பகவதி விசாரிக்க அவரும் தான் பார்வதியின் மகன் என்றும், அதே நேரத்தில் பூமிக்கு வந்துள்ளதினால் அவளுக்கும் மகன் என்று கூறினார். ஆகவே மிகுந்த செல்வம் இருந்த அவள் தன்னுடைய பொக்கிஷங்களை அவர் பாதுகாப்பதாக உறுதி தந்தால் அவரை அங்கு தங்க வைத்துக் கொண்டு நரபலி தருவதாக உறுதி கூறினாள். அவரும் அங்கு தங்கினார்.




கிராம தேவதைகளின் ஆலயத்தில் சுடலை மாடன் 

சுடலை மாடன் பிறப்புக் குறித்து உள்ள மற்றொரு கதை உள்ளது. திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது சீவலப்பேரி எனும் கிராமம். அங்கு சுடலை மாடனின் ஒரு ஆலயமும் உள்ளது. தன்னுடையப் பிள்ளையான முருகப் பெருமான் தங்கள் மீது கோபம் கொண்டு பழனிக்கு சென்று விட்டதும் பார்வதிக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அவள் தனது கணவர் சிவபெருமானிடம் அதை பற்றிக் கூற அவரும் அவளை மரகதக் கல்லினால் ஆன விளக்கில் தீபம் ஏற்றுமாறும் அது எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார். விளக்கு எரிந்து திரி எரிந்துபோய் மங்கத் துவங்கியதும் சிவபெருமான் வேண்டும் என்றே அதன் திரியை பெரியதாக்கிக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு நாள் அது பார்வதியின் தொடையில் விழுந்து விட அவள் சதை தீ காயத்தினால் வீங்கி விட்டது. ஆகவே சிவபெருமான் பிரும்மாவை அழைத்து அதற்கு குழந்தை உரு கொடுக்குமாறுக் கூற அதுவும் குழந்தையாக மாறி சுடலை என்ற பெயர் பெற்றது. அது பெரியவனானதும் பசி பசி என எப்போதும் பசியால் துடித்து கைலாயத்தில் சுடுகாட்டில் இருந்த உடல்களைத் தின்னத் துவங்கியது. ஒரு நாள் அதன் உடலில் பிண வாசனை அடிப்பதைக் கண்ட பார்வதி அதைப் பற்றி சிவனிடம் கூற கோபமுற்ற அவர் அதை கைலாசத்தில் இருந்து அனுப்பி விடுமாறு கூறினார். ஆகவே பார்வதி அதனுடன் இருபத்தி ஒரு பிடி சமைத்த உணவை தந்து வனப் பேச்சியை அழைத்து அதை அங்கிருந்து அழைத்துப் போய் விடுமாறு கூறினாள். அந்தக் குழந்தையும் தாமிரபரணியின் அருகில் இருந்த சீவலப்பேரியை அடைந்தது. அங்கு சென்றதும் அந்த சிறுவனுக்கு பசி எடுக்க அங்கு வந்த மசானம் என்ற ஆட்டு இடையனிடம் அவன் கொண்டு வந்த ஆட்டின் பாலைக் கறந்து தருமாறு கேட்க மசானமோ அது பால் தர முடியாத மலடி ஆடு என்றான். சுடலை விடவில்லை அதன் பாலைக் கரக்குமாறு கூற மசானமும் பாலைக் கறக்கத் துவங்க மலட்டு ஆடு நிறைய பாலை தந்ததும் அதை அந்த சிறுவன் குடித்தப் பின் அங்கேயே தங்கத் துவங்கியது.

நிற்க, பூமிக்கு வந்த சுடலை மாடன் பகவதியின் வீட்டில் தங்கினார். இதற்கு இடையில் கேரளத்தை சேர்ந்த புல்லாயன் என்ற மந்திரவாதி பகவதியின் அளவற்ற சொத்தைக் கொள்ளையடிக்க வந்தான். அவன் பல பேய்களை அனுப்பி சுடலை மாடன் தூங்கிக் கொண்டு இருந்த நேரத்தில் பகவதியின் செல்வத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்றுவிட்டான். ஆகவே அவனைக் கண்டுபிடித்து செல்வத்தை மீட்க சுடலை மாடன் கேரளாவிற்குப் போனார். அங்கு சென்று அவன் வீட்டைக் கண்டுபிடித்தவர், அந்த மந்திரவாதியின் மகளைக் கண்டு அவளை மணக்க விரும்பினார். அதை அவளிடமே கூறினார். ஆனால் அவள் அவரை மணப்பதற்கு மறுப்பு தெரிவித்தாள். ஆகவே ஒருநாள் அவர் அவளை மயக்கம் அடைய வைத்து அவளை கர்பவதியாக்கினார். அதன் பின்னர் புல்லாயனிடம் அவனுடைய மகளை அவன் கையினாலேயே தனக்கு பலியாகத் தர வேண்டும் என்று கூறிவிட்டு அப்படி செய்யாவிடில் அங்குள்ள அனைவரையும் கொண்டு விடுவதாகக் கூறினார். ஆகவே கருவுற்று உள்ள தனது மகளை வெட்டிக் கொல்ல மனமில்லாத அழுது புலம்பிய புல்லாயன் சுடலை மாடனிடம் கெஞ்சிக் கேட்க சுடலை மாடனும் மனம் இறங்கி அவளை தானே அனைவர் முன்னாலும் மணந்து கொள்ள அவள் பெயர் புல்லாயன் இசக்கி என ஆயிற்று. இப்படியாக பூமிக்கு வந்த மாடனை சுடலை மாட ஸ்வாமி என அழைத்து பூஜித்தார்கள்.


சுடலை மாடனுடன் கிராம தேவதைக்கள்

அது முதல் அவர் கிராமங்களின் தேவதையாக ஆனார். அவர் பாதுகாப்பில் இருந்த கிராமங்களில் கிராம மக்கள், பசு, மாடுகள், ஆடுகள் போன்றவற்றை பாதுகாத்து வரலானார் . அவருக்கு மிருக பலிகள் தரப்பட்டு ஆராதிக்கப்பட்டார். சுடலை மாடனின் ஆலயங்கள் பெரும்பாலும் சுடுகாடுகளின் அருகிலேயே அமைந்து இருக்கும். ஆகவே அவருடைய ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்படும் திரு நீரை பூசிக் கொண்டால் பில்லி சூனிய, பேய்களின் தொந்தரவுகள் நம்மை அண்டாது என்பது அபாரமான நம்பிக்கை.





சுடலை மாடன் விழாக்கள் 

சுடலை மாடனின் ஆலயங்களில் மாசிகாலரி என்ற வருடாந்தர விழா நடைபெறும். மூன்று நாட்கள் நடைபெறும் அந்த விழா குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஒரு வருடத்திற்கு ஒருமுறை, அல்லது இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அல்லது பல வருடங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறுமாம். அதில் பல சடங்குகள் உண்டு. அதில் ஒன்று நாடு இரவில் மயானத்திற்கு போய் பூஜித்தல். அதை வேட்டைக்குப் போதல் என்பார்கள். அதில் கோமாரத்தாண்டிகள் எனப்படுபவர்கள் கலந்து கொண்டு தீப்பந்தங்களை ஏந்திக் கொண்டு வினோதமான முறையில் உடையை அணிந்து கொண்டு நடு இரவில் மயானத்துக்குச் செல்வார்கள். அவர்களை வழி நடத்திச் செல்பவரை கனியான் என்று கூறுவார்கள். கனியான் வழி முழுவதும் இரு புறமும் முட்டைகளை வீசிக் கொண்டே செல்வார். அதை பலி தருதல் என்கிறார்கள். அது சுடலை மாடனின் எல்லையைக் குறிக்குமாம். அதைக் கடந்து எந்த தீய ஆவிகளுமே வந்து கோமாரத்தாண்டிகளுக்கு இடையூறு செய்ய மாட்டார்களாம். அதன் பின் மயானத்துக்குச் சென்று சாமி ஆடியதும், அவர்களை வழி நடத்திச் செல்லும் கனியான் சாமியாடிகளுடன் மயானத்துக்குச் சென்று அங்கு வாழை இலையை போட்டு அதில் உணவுகளை வைத்தப் பின், சில சடங்குகளை செய்துவிட்டு அந்த உணவை உருண்டையாகப் பிடித்து நாலு பக்கமும் வீசுவார். அதற்கு முன்னால் அவர் தனது கையை கீறிக் கொண்டு அதில் இருந்து வெளிவரும் ரத்தத்தை அங்கு ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மிருகங்களின் ரத்தத்துடன் கலந்து அதை சுடலைக்குப் படைப்பார். தன் ரத்தத்தை இலையில் வைக்கப்பட்டு உள்ள உணவுடன் கலந்து அதற்குப் பிறகுதான் நாலு பக்கமும் வீசுவார். அந்த உணவுகள் பூமியில் விழாது என்றும் அவற்றை அங்கு சுற்றித் திரியும் பேய் பிசாசுகள் அப்படியே அவற்றை பூமிக்கு மேலேயே பிடித்துக் கொண்டு போய் விடும் என்றும் நம்புகிறார்கள் . ஆகவேதான் சுடலை மாடனை பேய் பிசாசுகளின் அதிபதி என்றும், அவரால் மட்டுமே அவற்றைக் கட்டுப்படுத்தி வைக்க முடியும் என்றும் நம்புகிறார்கள். மிருக பலி தரப்படும்போது அவற்றின் ரத்தமும் ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்கப்படும். இப்படியாக வரலாற்று ஆதாரங்கள் இல்லாத வாய் மொழிக் கதையே கிராமப்புறங்களில் சுடலை மாடனைப் பற்றி வலம் வந்துள்ளது. அவை பெரும்பாலும் சாமியாடிகள் கூறிய செய்திகளின் அடிப்படையில் அமைந்து உள்ளதாம்.
காலப் போக்கில் மிருக பலிகள் நடைபெறுவது தவிர்க்கப்பட்டு வருகின்றது என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட சுடலை மாடனும் ஸ்ரீ வீர மஹா காளியும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதியில் தெற்கத்திய நாடார் பங்காளிகளுக்கு பாத்தியமான ஆலயத்தில் அவர்களது தெய்வமாக மறந்து உள்ளார்கள். அவர்களைப் பலரும் தமது குல தெய்வமாகவும் வணங்குகிறார்கள்.

இவருக்கு உள்ள பல்வேறு பெயர்கள்
இசக்கி மடன்
இருளோப்ப சாமீ
பூல் மாடன்
சுடலை மாடன் சாமீ
சுடலை ஈஸ்வரன்
மாடசாமி
மாடன்
மகாராஜா
சுடலேஷ்வரன்
சுடலையாண்டி
சுடலை முத்து
மாசன முத்து
முண்டன் சாமி
மயாண்டீஸ்வரர்
மாண்டி
சோலைசேரி (ஆலங்குளம் ) சுடலை மாடன்
சோலைசேரி (ஆலங்குளம் )இளங்காமணி அய்யனார் சாஸ்தா
பலவேசகரன் சுவாமி
ஊசிக்காட்டு சுடலை
முத்து சுவாமி
பத்மா பரம ஈஸ்வரன்
வெள்ளை பாண்டி
பலவேஷக்காரன்
கருத்த பாண்டி
முனியாண்டி
முனீஸ்வரன்
கருப்பசாமி


படம் நன்றி: சந்திபிரியா 



9 comments:

  1. பம்ப் செட். இளநீர் என்று திருநெல்வேலி கிராமத்தின் வனப்புகளை நீங்கள் சொல்லச் சொல்ல மனது அந்த பழைய பசுமையான நாட்களுக்குப் பறந்து விட்டது. புது உடையை அணிந்து பார்க்கும் தருணத்தில் அழகியாகவும் இளவரசனாகவும் உணர்வது அந்த வயதுக்கே உரிய தனிச் சிறப்பு. அதை அழகுற நினைவுகூர்ந்ததும் பிடித்திருந்தது எனக்கு. கிராமத்து திருவிழாவின் வித்தியாசமான அனுபவமும். அருகிலிருந்தவர் மீது பட்ட சாட்டையடி கொஞ்சம் உங்கள் மேல் பட்டு அழுததும்... பொக்கிஷப் பெட்டியில் இன்னொரு ரத்தினம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அருமை. சுடலைமாட சுவாமி கதையையும். விழர்க்களையும் பகிர்ந்தது கூடுதல் போனஸ். உஙகளின் சிரத்தைக்கு ஒரு ஜே!

    ReplyDelete
  2. The story about you is interesting.butthe Su.ma kathai bit boaring

    ReplyDelete
  3. அறியாத புது விடயங்கள்....
    நல்ல அனுபவப் பகிர்வு...
    ஒன்னு சொல்லிக்கிறேன் எதுவுமே சுருக்கமா இருந்தா நன்றாக இருக்கும்
    மாற்றான் கூட ரசிகர்களுக்கு அழுத்ததுக்குக் காரணம் அது மூணு மணி நேர படமென்பதால்

    ReplyDelete
  4. I AM LIKE YOUR STORY SRI MAYANDI SUDALAIMADASAMY PAKTHAN

    ReplyDelete
  5. ஏதோ ஒரு ஏக்கத்தில் சுடலைமாடன் என்று கூகிள் ஆண்டவனிடம் தேடினேன்.. உங்களது பதிவுதான் முதலில் வந்தது.. மீண்டும் எங்க ஊர் கோயில் கொடை எப்ப வரும்ன்னு நினைக்க வச்சிட்டிங்க...அழகா எழுதியிருக்கிங்க...

    ReplyDelete
  6. அண்ணாச்சி நீங்க சொன்ன விஷயங்களை நான் நேரிடையாகவே பார்த்திருக்கிறேன் - நன்றி

    ReplyDelete
  7. சுடலை மாடன் கதை விளக்கம் நன்று!

    ReplyDelete
  8. இளங்காமணி பற்றிய தேடலில் உங்கள் வலைப்பதிவை வாசிக்க நேர்ந்தது. அருமை அருமையான பல தகவல்கள் கிடைத்தன. நன்றி

    ReplyDelete